உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா
எஸ்தோனியா பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா கலாசார மந்திரி மற்றும் லத்வியா நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர்.
கீவ்,
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷியா படையெடுத்தது. எனினும், இது ஒரு ராணுவ நடவடிக்கை என்று ரஷியா கூறியது. உக்ரைனின் கீவ், டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. ஆனால் அவற்றை உக்ரைன் பின்னர் மீட்டது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷியா பதிவு செய்துள்ளது. அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷியா வைத்துள்ளது.
இதுபற்றி ரஷியாவில் இருந்து வெளிவரும் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ரஷிய உள்துறை மந்திரியின் தகவலின்படி, ரஷியாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்து உள்ளது.
உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் பலர் மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஷியா கைது வாரண்டுகளை பிறப்பித்து உள்ளது.
இதன்படி, எஸ்தோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா நாட்டின் கலாசார மந்திரி மற்றும் லத்விய நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்தனர். சோவியத் நாடாக இருந்த காலத்தில் இருந்த நினைவு சின்னங்களை அவர்கள் அழித்து விட்டனர் என கூறி இந்த பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மீதும் கடந்த ஆண்டில் ரஷியா கைது வாரண்டுகளை பிறப்பித்தது. எனினும், இந்த தகவலை உக்ரைன் நிராகரித்து உள்ளது.
இதுபற்றி உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ரஷிய சர்வாதிகாரி விளாடிமிர் புதினுக்கு எதிராக போர் குற்றங்களை புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதற்கான வாரண்ட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. இது 123 நாடுகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளது.