உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்க தயார் - ஜோ பைடன்
உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
கடந்த ஒன்பது மாதங்களாக போா்க்களத்தில் ரஷியாவை அஞ்சாமல், அசராமல் எதிா்த்து நிற்கிறது உக்ரைன். அது மாத்திரமல்ல, சில வேளைகளில், ரஷியப் படையினரைப் பின்வாங்கவும் வைக்கிறது.இதை விட வியப்பு என்னவென்றால், ரஷியா கைப்பற்றிய தனது நாட்டின் பல பகுதிகளை மீட்டெடுத்தும் வருகிறது. இது எப்படி சாத்தியமானது? உக்ரைனின் சாதுரியமா? போா்த்தந்திரமா? ரஷியாவை எதிா்க்க ஏனைய நாடுகள் செய்துள்ள மறைமுக உதவியா? இவற்றை ஆராய்ந்து பாா்த்தால், சில வினாக்களுக்கு பதில் கிடைக்கிறது; சில வினாக்களுக்கு விடை கிடைக்காமலும் இருக்கிறது.
ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் பதிலடித் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி-7 கூட்டமைப்பு போன்றவைதான் என்று கூறப்படுகிறது. எனவே ரஷியா திகைத்து நிற்கிறது. அதே சமயம் ரஷியா தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், "உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷிய அதிபர் புதின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கவும் தயார்" என குறிப்பிட்டார். ஆனால், புதின் அவ்வாறு தேடவில்லை என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்காவும், பிரான்ஸும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய இம்மானுவேல் மேக்ரன், ரஷியாவுடன் சமரசமாக செல்லுமாறு உக்ரைனை நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார். அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் மேக்ரன் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை ரஷியா வெளிப்படுத்தி உள்ளது. மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ்,
"சமரச பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதேநேரத்தில், அதற்கு முன்பாக உக்ரைனைவிட்டு ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று அது நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனையை ரஷியா ஒருபோதும் ஏற்காது.
அதோடு, ரஷியாவுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளை அமெரிக்கா இன்னும் அங்கீகரிக்கவில்லை. அந்தப் பகுதிகளுக்கு ரஷியா சட்டவிரோதமாக உரிமை கோருவதாகவே அமெரிக்கா தெரிவித்து வருகிறது. எனவே, இத்தகைய சூழலில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை" என தெரிவித்துள்ளார்.