ரஷிய பயங்கரவாதிகள் தாக்குதலால் உக்ரைனில் நூற்றுக்கணக்கான பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு - உக்ரைன் பிரதமர்


ரஷிய பயங்கரவாதிகள் தாக்குதலால் உக்ரைனில் நூற்றுக்கணக்கான பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு - உக்ரைன் பிரதமர்
x

கீவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

கீவ்,

கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கரமான தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது நேற்று முன் தினம் ரஷிய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அங்கு மிகப்பெரிய அளவில் தீப்பற்றியது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கீவ் நகர கவர்னர் ஒலெக்சி குலேபா தெரிவித்தார். மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மின் உற்பத்தி பாதிப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீவ் நகரில் வசிப்பவர்கள் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் சுமி பகுதிகள் என 3 பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் இன்று கூறியதாவது, "உக்ரைனின் 3 பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷிய பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் மின் விநியோக சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திலும் கிழக்கில் சுமி பிராந்தியத்திலும் "முக்கியமான உள்கட்டமைப்பு" மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. கீவ்வில் ஐந்து டிரோன் தாக்குதல்களை நடத்தியது.மின் உற்பத்தி பாதிப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.


Next Story