எல்லையில் பாதுகாப்பு மண்டலம்தான் எங்கள் இலக்கு.. உக்ரைன் அதிபர் அதிரடி
உக்ரைனின் ஊடுருவலை சற்றும் எதிர்பார்க்காத ரஷிய படைகள், தங்கள் சொந்த பிராந்தியத்தை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளன.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனினும் ரஷியா தனது இலக்கை எட்ட முடியவில்லை. ரஷியாவின் தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் உதவிகளுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருவதால் போர் நீடிக்கிறது.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி திடீரென உக்ரைன் வீரர்கள், எல்லையில் ரஷிய பகுதியான குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது. சுமார் 70 குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது. மேலும் அப்பகுதியில் உள்ள இரண்டு பாலங்களை தகர்த்து ரஷிய படைகளுக்கு அதிர்ச்சி அளித்தது. ரஷியாவின் வான்னோயி நகரின் அருகே உள்ள பாலம் தகர்க்கப்படும் வான்வழி வீடியோவை உக்ரைனின் விமான படை தளபதி மைகோலா ஒலெஸ்சக் வெளியிட்டார்.
எல்லையில் இருந்து ரஷியா நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. மற்ற நோக்கம் ஏதும் இல்லை என உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ரஷிய படைகளின் எல்லை தாண்டிய தாக்குதல்களை தடுக்க, ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதற்குத்தான் இந்த தாக்குதல் என முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் "தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும். முடிந்தவரை ரஷிய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது. உக்ரைனுக்கு எல்லையில் பாதுகாப்பு மண்டலம் தேவை. பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு" என்றார்.
உக்ரைனின் இந்த ஊடுருவலை சற்றும் எதிர்பார்க்காத ரஷிய படைகள், தங்கள் பகுதியை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த பதற்றத்துக்கு மத்தியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் மேலும் ஒரு பாலத்தை உக்ரைன் தகர்த்ததாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உக்ரைன் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.