இங்கிலாந்து பிரதமர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
இன்று) மதியம் 12.30 மணியவில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் சொந்த கட்சியான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.
அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்கு பதிவு வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்திய நேரப்படி திங்கட்கிழமை(இன்று) மதியம் 12.30 மணியவில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இங்கிலாந்தை ஆளப்போகும் புதிய பிரதமர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.
தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் லிஸ் டிரஸ்சுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.