பிரிட்டன் பொதுத்தேர்தலில் அதிக அளவில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்


UK Indian-origin MPs
x

கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.

லண்டன்:

பிரிட்டனில் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளது இந்த தேர்தல். 650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டனில் 400-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்தது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை 26 பேரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிச்மாண்ட் மற்றும் நார்தலர்டன் தொகுதியில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சியில் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த கிளாரி கவுடின்ஷோ (கோவா) மற்றும் முன்னாள் உள்துறை செயலாளர்கள் சுவெல்லா பிராவர்மேன், பிரீத்தி பட்டேல் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். ககன் மொகிந்திரா, ஷிவானி ராஜா, கனிஷ்கா நாராயணன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியை பொருத்தவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷைலேஷ் வாரா, நார்த் வெஸ்ட் கேம்பிரிட்ஜ்ஷைர் தொகுதியில் தொழிலாளர் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதேபோல் லண்டனின் ஹெண்டன் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட அமீத் ஜோகியா தொழிலாளர் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். சீமா மல்ஹோத்ரா போன்ற கட்சி மூத்த தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கோவா வம்சாவளியைச் சேர்ந்த வலேரி வாஸ் (கீத் வாஸின் சகோதரி), வால்சால் மற்றும் ப்ளாக்ஸ்விச் தொகுதியில் வென்றார். அதே போல் விகான் தொகுதியில் லிசா நந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரிட்டன்வாழ் சீக்கிய எம்.பி.க்கள் பிரீத் கவுர் கில், தன்மன்ஜீத் சிங் தேசி இருவரும் முறையே பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மற்றும் ஸ்லோ தொகுதிகளில் வென்றனர். நாவேந்து மிஸ்ரா (ஸ்டாக்போர்ட்) மற்றும் நதியா ஒயிட்டோம் (நாட்டிங்ஹாம் கிழக்கு) ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜாஸ் அத்வால் (இல்போர்ட் சவுத்), பேகி சங்கர் (டெர்பி சவுத்), சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன் டெஸ்ட்), ஹர்பிரீத் உப்பல் (ஹட்டர்ஸ்பீல்ட்), வரிந்தர் ஜஸ் (வால்வர்ஹாம்ப்டன் வெஸ்ட்), குரிந்தர் ஜோசன் (ஸ்மெத்விக்), கனிஷ்கா நாராயண் (வேல் ஆப் கிளாமோர்கன்), சோனியா குமார் (டட்லி), சுரீனா பிராக்கன்பிரிட்ஜ் (வால்வர்ஹாம்ப்டன் நார்த் ஈஸ்ட்), கிரித் என்ட்விசில் (போல்டன் நார்த் ஈஸ்ட்), ஜீவன் சந்தர் (லாபரோ) மற்றும் சோஜன் ஜோசப் (ஆஷ்போர்ட்) ஆகியோரும் தொழிலாளர் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.


Next Story