உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு: தலைநகர் கம்பாலாவில் மேலும் 9 பேருக்கு எபோலா தொற்று..!
உகாண்டா தலைநகர் கம்பாலா நகரில் மேலும் 9 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி இன்று தெரிவித்தார்.
கம்பாலா(உகாண்டா),
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு இரு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில், உகாண்டா தலைநகர் கம்பாலா நகரில் மேலும் 9 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜேன் ரூத் அசெங் இன்று தெரிவித்தார்.
இதுவரை 75 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுவரை எபோலோ நோய் தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
அதேவேளை, மற்றொரு அண்டை நாடான காங்கோவிலும் எபோலா பரவலுக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன.