ராஷித் ரோவர் இன்று நிலவில் தரையிறங்குகிறது


ராஷித் ரோவர் இன்று நிலவில் தரையிறங்குகிறது
x

அமீரகத்தில் முழுவதும் உருவாக்கப்பட்ட ராஷித் ரோவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக கால்பதிக்க உள்ளது. இதற்கிடையே 100 கி.மீ. உயரத்தில் இருந்து நிலவின் நிலப்பரப்பை ஹக்குட்டோ ஆர் லேண்டர் துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.

ராஷித் ரோவர்

அமீரக நிலவு பயண திட்டத்தின் கீழ் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் முழுக்க முழுக்க அமீரக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட ராஷித் ரோவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி அமெரிக்காவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலவு வாகனத்திற்கு துபாயின் முன்னாள் ஆட்சியாளர் மறைந்த ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூமின் நினைவாக ராஷித் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 5 மாத வெற்றிகரமான பயணத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் அமீரகத்தின் ராஷித் ரோவரை சுமந்து கொண்டு சுற்றி வரும் ஹக்குட்டோ-ஆர் லேண்டர் அனைத்து விதமான தொழில்நுட்ப செயல்பாடுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சரியான திசையில் பயணம் செய்து கொண்டு இருக்கும் இந்த லேண்டர் விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுத்து அனுப்பியது

இந்த கட்டத்தில் ஹக்குட்டோ-ஆர் லேண்டர் தனது உயரத்தை படிப்படியாக குறைக்கும். அதாவது நிலவின் தரைக்கும், விண்கலத்துக்கும் இடையே 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹக்குட்டோ-ஆர் லேண்டரின் வேகம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதில் 100 கி.மீ. உயரத்தில் இருந்து நிலவின் நிலப்பரப்பை ஹக்குட்டோ ஆர் லேண்டர் துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.

அதனை தொடர்ந்து நிலவில் ஈர்ப்பு விசை மிகவும் குறைவானதாலும், வளி மண்டலம் இல்லாத காரணத்தாலும் அதன் வேகம் வெகுவாக குறைக்கப்பட்டு முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட கட்டளைகளை இன்று செயல்படுத்த உள்ளது. இதற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவில் இன்று கால்பதிக்கும்

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து இன்று உள்ளே நுழையும்போது அதில் உள்ள புரொப்பல்ஷன் என்ஜின் இயக்கப்பட்டு வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இந்த கட்டத்தில் என்ஜின் இயக்கப்பட்டதும் அதன் உயரத்தையும், நிலையாக தரையிறங்குவதற்கும் தன்னை சரி செய்துகொள்ளும். பின்னர், செங்குத்தாக தனது நிலையை மாற்றி படிப்படியாக நிலவின் தரையில் ஹக்குட்டோ-ஆர் லேண்டர் கால்பதிக்கும். இது டெர்மினல் லேண்டிங் எனப்படுகிறது. இதற்காக நிலவின் வடதுருவத்தில் உள்ள மேர் பிரிகோரிஸ் என்ற பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கியதும் அதன் வயிற்றுப்பகுதியில் இருந்து ராஷித் ரோவர் மெல்ல வெளியில் வந்து சோலார் தகடுகள், கேமராவுடன் செயல்பட தொடங்கும். குறிப்பாக ராஷித் ரோவர் இதுவரை மற்ற நாடுகள் ஆய்வு செய்யாத நிலப்பரப்பில் பல்வேறு சோதனைகளை செய்ய உள்ளது. இதில் நிலவின் மண் மாதிரிகளை சோதனை செய்ய உள்ளது.

யூடியூப் சேனலில் ஒளிபரப்பு

அதேபோல் நிலவில் உள்ள தூசுபடலங்கள் மற்றும் மேற்பரப்பின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யும். மொத்தம் 1000 புகைப்படங்களை நிலவில் இருந்து துல்லியமான தரத்தில் அனுப்ப உள்ளது. இதன் நேரலை காட்சிகள் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் இணையதளம் மற்றும் ஐ ஸ்பேஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று தரையிறங்கி மொத்தம் ஒரு நிலவு நாள் (பூமியின் 12 நாட்கள்) அங்கு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ராஷித் ரோவர் நிலவின் மண் மற்றும் மேற்பரப்பை முப்பரிமாண கேமரா மூலமாக உயர்தரத்தில் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும். குறிப்பாக நுண்ணொக்கி மூலம் எடுக்கப்படும் படங்கள் மண்ணியல் ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல் நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசுப்படலங்கள், நிலவின் பாறைப்படலம் குறித்த ஆய்வு, புதிய தொழில்நுட்பங்களுக்கான 10 ஜிகாபைட் அளவுள்ள தரவுகள் சேகரிப்பு போன்றவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் சூரிய மண்டலம் மற்றும் பூமியின் தோற்றம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Next Story