உக்ரைனில் பத்திரிக்கையாளர்கள் சென்ற கார் மீது தாக்குதல் - இருவர் படுகாயம்; ஓட்டுனர் பலி!


உக்ரைனில் பத்திரிக்கையாளர்கள் சென்ற கார் மீது தாக்குதல் - இருவர் படுகாயம்; ஓட்டுனர் பலி!
x

அந்த கார் தீப்பிடித்ததில் பத்திரிகையாளர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நேற்றுடன் 100 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் போர் ஓய்ந்த பாடில்லை. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளன.

உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள சீவிரோ-டோனெட்ஸ்க் அருகே நடந்த தாக்குதலில் டிரைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.மேலும், இரண்டு பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த 2 பத்திரிகையாளர்கள், போர் குறித்த செய்தி சேகரிக்க ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் ரஷ்ய பிரதிநிதிகள் வழங்கிய காரில் நேற்று பயணம் செய்தனர்.

சீவிரோடோனெட்ஸ்க் செல்லும் வழியில் நடந்த தாக்குதலில் அந்த கார் தீப்பிடித்ததில் பத்திரிகையாளர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். ஆனால், அந்த காரின் ஓட்டுனர் பலியானார். இந்த தகவலை கீவ் இண்டிபென்டென்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த திங்களன்று, கிழக்கு உக்ரைனில் செய்தி சேகரிக்க ப்ரெடெரிக் லெக்லெர்க்-இம்ஹாப் என்ற பிரெஞ்சு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story