துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சற்று முன்னர் துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
அங்காரா,
கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. மற்றொரு பயங்கரவாதியை அங்கிருந்த போலீசார் சுட்டு கொன்றனர்.
கோடை விடுமுறை
துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக 2 மர்ம நபர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்துக்கு வந்தனர். அதில் ஒருவர் திடீரென தனது உடலில் பொருத்தியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தார். இதனால் அங்கு பயங்கர சத்தம் கேட்டது.
2 போலீசார் படுகாயம்
இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதற்கிடையே அவருடன் வந்திருந்த மற்றொரு பயங்கரவாதியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எனவே அங்கிருந்த போலீசார் அவரை சுட்டு கொன்றனர்.
பொறுப்பேற்கவில்லை
இதனையடுத்து பெரும் பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தற்கொலை படை தாக்குதல் நடந்த அந்த பகுதியில் ராக்கெட் லாஞ்சர் போன்றவை கிடந்தன. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ மந்திரி யில்மாஸ் துங்க் கூறினார். துருக்கியில் குர்திஷ் மற்றும் தீவிர இடதுசாரி போராளி குழுக்கள், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.