ஹைதி அதிபர் கொலை வழக்கில் தேடப்படும் நபரை விடுதலை செய்த துருக்கி அரசு
சமீர் மண்டலை ஹைதி நாட்டிடம் ஒப்படைக்கும் கோரிக்கையை துருக்கி கோர்ட் நிராகரித்தது.
இஸ்தான்புல்,
ஹைதி நாட்டின் அதிபர் ஜுவெனல் மாய்செ, கடந்த 2021 ஜூலை மாதம் அவரது இல்லத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது மனைவி படுகாயமடைந்தார். ஹைதி நாட்டை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய பல்வேறு நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிலர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக ஹைதி போலீசாரால் சந்தேகிக்கப்பட்டும் சமீர் மண்டல் என்ற தொழிலதிபரை அந்நாட்டு அரசு தேடி வருகிறது.
அவர் துருக்கியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அவருக்கு எதிராக இண்டர்போல் மூலம் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என துருக்கி அரசிடம், ஹைதி காவல்துறை கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில், ஹைதி நாட்டின் நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என துருக்கி கோர்ட்டில் சமீர் மண்டல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, இண்டர்போல் வழங்கிய ரெட் நோட்டீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாக சமீர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதனை ஏற்று சமீர் மண்டலை ஹைதி நாட்டிடம் ஒப்படைக்கும் கோரிக்கையை துருக்கி கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து அவர் கடந்த 3 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட சமீர் மண்டல், துருக்கியில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றடைந்தார்.