உக்ரைன் போரை டிரம்ப் ஒரு நாளில் நிறுத்திவிடுவாரா..? அவரால் முடியாது.. ரஷியாவின் ஐ.நா. தூதர் பதிலடி


Trump cant stop Russia-Ukraine war in one day
x

ரஷியாவின் ஐ.நா. தூதர் வாசிலி நெபன்சியா

உக்ரைனின் மேற்கத்திய ஆதரவு நாடுகள், ஏப்ரல் 2022 அமைதி ஒப்பந்தத்தைத் தடுத்ததுடன், ரஷியாவுடன் தொடர்ந்து போரிடுமாறு உக்ரைனிடம் கூறுவதாக ஐ.நா. தூதர் தெரிவித்தார்.

நியூயார்க்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், தனது பிரசாரத்தின்போது தற்போதைய அதிபர் ஜோ பைடனின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறார். விவாதத்திலும் அவரது கை ஓங்கி உள்ளது. நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வருவேன் என பேசி வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் சிஎன்என் டவுன் ஹாலில் டிரம்ப் பேசியபோது, "அங்கு ரஷியர்கள் மற்றும் உக்ரேனியர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அதை 24 மணி நேரத்தில் செய்துவிடுவேன். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை சந்தித்த பின்னர் அது நடக்கும்" என்றார்.

சமீபத்தில் பைடனுடனான நேரடி விவாதத்தில் பேசியபோது, 'நாம் உண்மையான அதிபரை பெற்றிருந்தால் புதின் மரியாதை கொடுத்திருப்பார். உக்ரைன் மீது படையெடுத்திருக்கமாட்டார்' என பைடனை விமர்சனம் செய்தார்.

இவ்வாறு ரஷியா-உக்ரைன் போர் குறித்து டிரம்ப் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அது அவரால் முடியாது என ரஷியாவின் ஐ.நா. தூதர் வாசிலி நெபன்சியா கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

உக்ரைன் சிக்கலுக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. ரஷியாவும் உக்ரைனும் ஒரு ஒப்பந்தத்தை நெருங்கியபோது, 2022 ஏப்ரல் மாதத்தில் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் போர் முடிவுக்கு வந்திருக்கும். உக்ரைனின் மேற்கத்திய ஆதரவு நாடுகள், ஏப்ரல் 2022 அமைதி ஒப்பந்தத்தைத் தடுத்ததுடன், ரஷியாவுடன் தொடர்ந்து போரிடுமாறு உக்ரைனிடம் கூறுகின்றன. இப்போது, ஜெலன்ஸ்கி அமைதித் திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை தூக்கிக்கொண்டு ஓடுகிறார். இது நிச்சயமாக ஒரு அமைதி திட்டம் அல்ல, நகைச்சுவை.

நேட்டோ அமைப்பின் இணையும் திட்டத்தை உக்ரைன் கைவிட்டால், உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்தும் படைகளை திரும்ப பெற உடனே உத்தரவிடுவதற்கு தயாராக இருப்பதாக புதின் கூறியிருந்தார். ஆனால், அதை ஜெலன்ஸ்கி நிராகரித்துவிட்டார்.

ஜெலன்ஸ்கியின் அமைதி திட்டம் பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல. ஏப்ரல் முதல் என்ன நடக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, அவர் யதார்த்தமாக இருக்க வேண்டும். களத்தில் உக்ரைனின் நிலைமை எவ்ளவுக்கு எவ்வளவு கடினமாக மாறுகிறதோ, போரை முடிவுக்கு கொண்டு வருவதும் அவ்வளவு கடினமான ஒன்றாக மாறிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story