ஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி: ஐ.நா. அமைப்பு
லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது.
ஜெனீவா,
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியே பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கு லிபியாவை ஒரு மைய புள்ளியாக வைத்துள்ளனர்.
லிபியா நாட்டில் உள்நாட்டு குழப்பம், கிளர்ச்சியாளர்கள் வன்முறை ஆகியவற்றால் ஸ்திர தன்மையற்ற அரசாட்சி காணப்படுகிறது. எண்ணெய் வளமிக்க அந்நாட்டில் இருந்தும் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் மத்திய தரை கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் மற்றும் படகுகள் வழியே அகதிகளாக தப்பி செல்கின்றனர். ஆபத்து நிறைந்த இந்த பயணத்தின்போது, விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனினும், வழியின்றி இதுபோன்ற வெளிநாட்டு பயணத்திற்கு பொதுமக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக புறப்பட்டு சென்ற படகு ஒன்று லிபிய கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் கவிழ்ந்துள்ளது.
அவர்களை மீட்கும் பணி நடந்தது. இந்நிலையில், ஐ.நா.வுக்கான புலம்பெயர்வோர் அமைப்பு நேற்று வெளியிட்டு உள்ள செய்தியில், இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 7 அகதிகள் லிபியா கடற்கரை பகுதிகளில் நீந்தி கரை சேர்ந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது. காணாமல் போன 73 அகதிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என தெரிவித்து உள்ளது.