வான்வெளியில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்


வான்வெளியில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்
x

தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டோக்கியோ,

இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவைகளை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் தகாஷி இடோ ஆகியோரின் சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த கிரகம் பூமி போன்று இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைபர் பட்டை எனப்படுகிறது. இது பனி பொருட்கள் நிறைந்த இடம் என கருதப்படுகிறது. இது 9-வது கிரகத்தை விட மிக அருகில் உள்ளது. ஆரம்பகால சூரிய குடும்பத்தில் இதுபோன்ற பல கோள்கள் இருந்ததால், ஒரு ஆதி கோளாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். கைபர் பெல்ட்டில் மில்லியன் கணக்கான பனிக்கட்டி பொருட்கள் இருப்பதாக அறியப்படுகிறது, அவை நெப்டியூனுக்கு அப்பால் அமைந்துள்ளதால் அவை டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது . இவை சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியவை என்று வானியலாளர்கள் நம்புகின்றனர்.

அவை பாறை, உருவமற்ற கார்பன் மற்றும் நீர் மற்றும் மீத்தேன் போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளின் கலவைகளால் ஆனவை. "டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்களின் சுற்றுப்பாதைகள் வெளிப்புற சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாத கிரகம் இருப்பதைக் குறிக்கலாம்" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பாறை மற்றும் பனி உடல்கள் வெளிப்புற சூரிய மண்டலத்தில் கிரக உருவாக்கத்தின் எச்சங்கள். அருகாமையில் உள்ள ஏதோ ஒரு பெரிய ஈர்ப்பு விசை இந்த பொருட்களில் ஈர்க்கப்பட்டு, அவற்றுக்கு "விசித்திரமான சுற்றுப்பாதைகள்" வழங்குவதை ஆராய்ச்சி குழு கவனித்தது.

இந்த கிரகம் ஏற்கனவே சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் இருந்து வேறுபட்டது. இது மிகவும் பெரியது என்பதால் தொலைதூர சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இது நெப்டியூனை விட சூரியனில் இருந்து 20 மடங்கு தொலைவில் சுற்றி வருகிறது.

இருப்பினும் இன்று வரை வானியலாளர்கள் 9 கிரகம் இருப்பதாக மட்டுமே கூறி உள்ளனர்.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில்,

450 கோடி வருடங்களுக்கு முன்பு நமது சூரியன் உருவாகியது. சூரியன் உருவாகிக் கொண்டிருந்தபோது அதனை சுற்றி சுழன்று கொண்டிருந்த தூசுக்களும் வாயுக்களும் விண்கற்களும் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த மோதலின் காரணமாகவே சூரியத்தொகுதியில் உள்ள 8 கோள்களும் அதன் துணைக்கோள்களும் உருவானது. இப்படி நடந்த மோதலில் ஒன்றுடன் ஒன்று மோதிய அனைத்து பொருட்களும் கோள்களாக மாறவில்லை. மீதம் இருந்த அனைத்தும் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இப்படி எஞ்சிய பொருட்கள் சூரியத் தொகுதியின் உள்ளே சிறுகோள் பட்டை எனும் பகுதியில் சூரியனைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றன. இந்த சிறுகோள் பட்டை போன்றே நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் காணப்படும் சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விண்கற்களின் அமைப்பே கைப்பர் பட்டை ஆகும்.

கைப்பர் பட்டையில் உள்ள மிகப்பெரிய கோளான புளூட்டோ 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் கைப்பர் பட்டையை விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் புளூட்டோவை போன்று அதில் உள்ள ஏனைய பொருட்கள் எதுவும் சூரிய ஒளியை பிரதிபலிக்கவில்லை. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவே கைப்பர் பட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த கைப்பர் பட்டை பகுதியில்தான் பூமி போன்ற கிரகம் இருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படவேண்டியது அவசியம். நாங்கள் கண்டுபிடித்திருப்பது எல்லோரும் கூறிவரும் 9-வது கிரகம் அல்ல. சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் உள்ளது என்கின்றனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.

சூரியனில் இருந்து இந்த புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவில் உள்ளது. ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரமாகும். ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த தகவல் வானியல் அறிஞர்களின் அடுத்தகட்ட தேடுதலுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.


Next Story