அமெரிக்க பொருளாதாரம் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது: அதிபர் பைடன் உரை
அமெரிக்காவின் பொருளாதாரம் பூமியில் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது என அதிபர் பைடன் உரையாற்றி உள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் பைடன் கேபிடால் நகரில் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையின்போது, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோதும் மற்றும் உக்ரைன் மீது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படையெடுத்தபோதும், அமெரிக்காவின் பொருளாதாரம் பூமியில் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில், கொரோனா பெருந்தொற்றானது நம்முடைய வினியோக சங்கிலியில் இடையூறு ஏற்படுத்தியது. உக்ரைனில் புதினின் முறையற்ற மற்றும் அராஜக போரானது, எரிபொருள் மற்றும் உணவு வினியோகத்தில் பாதிப்பை உண்டாக்கியது.
2 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் தள்ளாடி கொண்டு இருந்தது. ஆனால், நான் இங்கே நின்று கொண்டிருக்கும்போது, 1.2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்து இருக்கிறோம்.
இதற்கு முன் வேறெந்த அதிபரும் 4 ஆண்டுகளில் செய்யாத வகையில், 2 ஆண்டுகளில் அதிக வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பாதிப்பால் நமது வர்த்தகம் நின்று போனது. கல்வி கூடங்கள் மூடப்பட்டன. பல விசயங்கள் நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டன. தற்போது, கொரோனா நமது வாழ்வை கட்டுப்படுத்த போவதில்லை என அவர் பேசியுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகம் மிக பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டது என 2021-ம் ஆண்டு ஜனவரியில் கேபிடாலில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்திய விசயங்களை குறிப்பிட்டு பேசிய பைடன், அதற்கு பின்னர், தான் பதவியேற்றபோது இருந்த நிலையை விட அமெரிக்க ஜனநாயகம் யாருக்கும் வளைந்து கொடாமல், முறியாமல் சிறப்பான முறையில் உள்ளது என கூறியுள்ளார்.
அமெரிக்க வரலாறு என்பது வளர்ச்சி மற்றும் மீள்உருவாக்கத்திற்கான வரலாறு என அதிபர் பைடன் தனது உரையின்போது பேசினார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.