புது மனைவியை ராணுவ ஹெலிகாப்டரில் வைத்து வீட்டுக்கு அழைத்து வந்த தலீபான் தளபதி


புது மனைவியை ராணுவ ஹெலிகாப்டரில் வைத்து வீட்டுக்கு அழைத்து வந்த தலீபான் தளபதி
x

ஆப்கானிஸ்தானில் புது மனைவியை ராணுவ ஹெலிகாப்டரில் வைத்து தலீபான் தளபதி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.



காபூல்,



ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தலீபான் பயங்கரவாதிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர். அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் களமிறங்கின. இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். பலர் அகதிகளாக வெளியேறினர்.

இந்த நிலையில், அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் படைகள் முழுவதும் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி சென்றது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வாழ்வை தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர். தலீபான்கள் ஆட்சிக்கு வந்ததும், பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் விட்டு சென்ற ஆயுதங்களை, அந்நாட்டின் ஜபுல் மாகாணத்தில் உள்ள ஆயுத சந்தைகளில் தலீபான் தளபதிகள் விற்பனை செய்துள்ளனர்.

ஜபுலில் தலீபான் தளபதிகளால் விற்கப்பட்ட அந்த ஆயுதங்களில் பல ரகசிய முறையில் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றன என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு காமா பிரஸ் என்ற உள்ளூர் ஊடகம் வெளியிட்டு உள்ள தகவலில், தலீபான்களின் ஹக்கானி பிரிவின் தளபதியாக இருந்து வருபவர், தனது புது மனைவியை ஹெலிகாப்டர் ஒன்றில் வைத்து அழைத்து வந்துள்ளார் என தெரிவித்து உள்ளது.

அந்த தளபதி கோஸ்ட் மாகாண பகுதியை சேர்ந்தவர். அவரது மனைவி, ஆப்கானிஸ்தானின் கிழக்கே லோகர் மாகாணத்தில் பர்கி பராக் மாவட்டத்தில் உள்ள ஷா மஜார் பகுதியை சேர்ந்தவர். இதுபற்றி வெளியான வீடியோ ஒன்றில், புது மனைவியை தளபதி ராணுவ ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்து வரும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

அந்த ஹெலிகாப்டர் தளபதியின் வீடு அருகே தரையிறங்கும் காட்சிகளும் உள்ளன. இதுதவிர, தனது மாமனாரிடம் அந்நாட்டு மதிப்பின்படி 12 லட்சம் ஆப்கானிய கரன்சிகளை வரதட்சணையாக வழங்கிய தளபதி அவரது மகளின் கரம் பற்றியுள்ளார். எனினும் இந்த செய்தியை தலீபானின் துணை செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அகமதி மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என தெரிவித்து உள்ளார்.

எனினும், சமூக ஊடகத்தில் வெளியான இந்த வீடியோவை கண்ட மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். பொது சொத்துகளை தவறாக பயன்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


Next Story