தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடல்... உடலை சுற்றி ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் பாதுகாவலர்கள்
இன்று ராணியின் உடல் லண்டன் நோக்கி கொண்டு செல்லப்பட உள்ளது.
எடின்பெர்க்,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்தார். அவரது உடல் கார் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டு வரப்பட்டது. அங்கு உள்ள புனித கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டது.
இதையொட்டி, தேவாலயத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டர்.தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலைச் சுற்றி ஸ்காட்லாந்து அரச வழிமுறைப்படி வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டு, அரண்மனை மெய்க்காப்பாளர்களும், வில்லாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறிப்பிட்ட இடைவெளி விட்டு, பாதுகாப்பு வளையம் போடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஸ்காட்லாந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று, லண்டன் நோக்கி ராணியின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.
அங்கு நாளை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் 4 நாட்கள் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராணியின் உடலுக்கு பல லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.