உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்,
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. பல அலைகளாக பரவி வரும் இந்த தொற்று தற்போதும் லட்சக்கணக்கானவர்களை தினமும் பாதித்து வருகிறது.
இதன் மூலம் உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 கோடியை கடந்து விட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 60 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 934 பேர் கொரோனா தொற்றால் பாதித்து இருப்பதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
இதைப்போல கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் 64.85 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 9.41 கோடிபேர் பாதிக்கப்பட்டு, 10.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவில் 4.43 கோடி பேர் தொற்றால் பாதித்து உள்ளனர். 3.46 கோடி பாதிப்புகளை கொண்ட பிரான்ஸ் 3-ம் இடத்தில் உள்ளது.