சூடானில் இருந்து விரைவாக தூதரக அதிகாரிகள், குடிமக்களை வெளியேற்ற தொடங்கிய பிரான்ஸ் அரசு
சூடான் மோதலால் அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் அரசு தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை விரைவாக வெளியேற்ற தொடங்கி உள்ளது.
பாரீஸ்,
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, சண்டை நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எங்களது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர் என கூறியுள்ளார். இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், கார்ட்டூம் நகரில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எனது உத்தரவின் பேரில் இன்று, அமெரிக்க ராணுவத்தினர் சென்று பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
அவர்களை மீட்டு கொண்டு வந்த நம்முடைய ஈடு இணையற்ற திறமையான ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நமது முயற்சி வெற்றி பெறுவதில் உதவிய முக்கியம் வாய்ந்தவர்களான ஜிபவுட்டி, எத்தியோப்பியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
அமெரிக்கர்களை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் எங்களுடைய நட்பு நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம். சூடானில் மீதமுள்ள அமெரிக்கர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் பணிகளை பற்றி தனது குழுவினரிடம் இருந்து சீராக தகவல்கள் கிடைக்க பெறுகின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், சூடான் நாட்டில் நடந்து வரும் ராணுவ வீரர்கள் இடையேயான மோதலால் அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் அரசும் தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் விரைவாக அவர்களை வெளியேற்ற தொடங்கி உள்ளது.
இதுபற்றி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை அடிப்படையில், சி.என்.என். வெளியிட்டு உள்ள செய்தியில், சூடானில் இருந்து பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை அரசு விரைவாக வெளியேற்ற தொடங்கி உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த வெளியேற்ற நடவடிக்கையில், ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடுகளின் குடிமக்களும் அடங்குவார்கள் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேபோன்று சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்களை சவுதி அரேபிய அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.