ஜோர்டான் நாடு போருக்கான தளம் அல்ல; அமெரிக்காவிடம் தெளிவுப்படுத்திய அரசர் அப்துல்லா


ஜோர்டான் நாடு போருக்கான தளம் அல்ல; அமெரிக்காவிடம் தெளிவுப்படுத்திய அரசர் அப்துல்லா
x

ஜோர்டான் மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதனையும் நாடு சகித்து கொள்ளாது என்று அரசர் அப்துல்லா அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

அம்மன்,

ஜோர்டான் நாட்டுக்கு அமெரிக்காவை சேர்ந்த நாடாளுமன்ற பணியாளர் குழுவினர் வருகை தந்துள்ளனர். அவர்களை அந்நாட்டின் அரசர் அப்துல்லா-2 முறைப்படி வரவேற்றார். இதன்பின், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது மற்றும் மண்டல வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய அரசர் அப்துல்லா, ஜோர்டான் நாடு எந்தவொரு நாடும் போர் செய்வதற்கான தளம் அல்ல என தெளிவுப்படுத்தினார். ஜோர்டான் மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதனையும் நாடு சகித்து கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.

காசாவில் தொடரும் போரானது, அந்த பகுதியின் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்த அவர், உடனடியாக நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்த முடிவை ஏற்படுத்தி, போரை நிறுத்த சர்வதேச முயற்சிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதலால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி எச்சரித்த அரசர், ஜெருசலேமில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனித தலங்களில் நடைபெறும் அத்துமீறல்களை பற்றியும் குறிப்பிட்டார்.

பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பகுதியின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்திற்கு, இரு நாடு தீர்வே அடிப்படையான ஒரே வழியாக இருக்கும். பரந்த அமைதி ஏற்பட வழிவகுக்கும் என அதன் முக்கியத்துவம் பற்றி மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார்.

ஐ.நா. நிவாரண மற்றும் பணி கழகம், காசாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது அரசர் அப்துல்லா கேட்டு கொண்டார்.


Next Story