டைட்டானிக் கப்பலை காண சென்ற 5 பேரும் உயிரிழப்பு..!
நீர்மூழ்கி கப்பலில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக என அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடா,
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண கனடாவில் இருந்து கடந்த 16ம் தேதி கடலுக்குள் மினி நீர்மூழ்கி கப்பல் சென்றது. நீர் மூழ்கி கப்பலானது கடலின் ஆழத்தில் சென்ற போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து கனடா, அமெரிக்க கடலோர காவல்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை , விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். நீர்மூழ்கி கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்து விடும் என்பதால் அதில் பயணம் செய்த 5 பேரையும் உயிருடன் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கடியில் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நீர்மூழ்கி கப்பல் வெடித்துச்சிதறியதாகவும் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாகவும் அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.