தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்; பாகிஸ்தான் மந்திரி கவலை
தேர்தலுக்கு ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவது என்பது பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உட்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொது தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் உள்துறை மந்திரி பொறுப்பு வகிக்கும் சர்ப்ராஜ் அகமது புக்தி இன்று கூறும்போது, நாட்டில் நடைபெற உள்ள பொது தேர்தலின்போது, அரசியல் தலைவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள கூடிய சூழல் காணப்படுகிறது என கவலை தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி டான் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், தேர்தல் நடைபெற கூடிய நாட்களின்போது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான வரலாறு நாட்டில் உள்ளது.
2002-ம் ஆண்டில் இருந்தே, முன்னாள் பிரதமர்கள் சவுகத் ஆசிஸ், பெனாசீர் பூட்டோ, நவாப் சனாவுல்லா ஜெரி மற்றும் மிர் சிராஜ் கான் ரெய்சானி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் அரசியல் பேரணிகளின்போது இலக்காக கொள்ளப்பட்டனர் என கூறியுள்ளார்.
எனினும், மக்கள் சுதந்திரத்துடன் வாக்களிப்பதற்கான உரிமையை பயன்படுத்தும் வாய்ப்பை நாங்கள் வழங்குவோம் என உறுதி கூறினார்.
தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளுக்கு ஆயுத படைகளை வழங்க அரசு தயார் என கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், பயங்கரவாத ஒழிப்பு பணியில் எங்களுடைய துணை ராணுவ படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு ராணுவத்தினரை ஈடுபடுத்துவது என்பது பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உட்பட்டது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.