ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: தொடர் பேரழிவு காரணமாக பொதுமக்கள் அச்சம்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
காபூல்,
வடமேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் நேற்று காலை 8 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெராத் தலைநகரில் இருந்து 34 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.3 புள்ளிகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவானது. பூமிக்கடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. நில அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர். மேலும் மைதானங்கள், பரந்த சமவெளிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கற்குவியல்களாக மாறிய வீடுகள்
இந்த நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் தாக்குபிடிக்க முடியாமல் இடிந்து விழுந்து நொறுங்கி பலத்த சேதத்திற்குள்ளாகின. இதனால் அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் சின்னாபின்னமாகி கற்குவியல்களாக காட்சியளித்தன. மேலும் ஊரில் இருந்த ஒரு சில அடுக்குமாடி கட்டிடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டது. இதனையடுத்து மீட்புத்துறையினரின் உதவியுடன் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு மக்கள் மண்வெட்டிகளையும் வெறும் கைகளையும் பயன்படுத்தினர்.
இறந்தநிலையில் ஒருவர் மீட்பு
நில அதிர்வு காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ஒருவர் மூச்சுத்திணறி பலியாகி உள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகளை சேர்ந்த மீட்புத்துறையினர், டாக்டர் குழுக்கள் ஆகியவை மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருந்து உதவி வருகிறார்கள். மீட்புப்பணியில் தொய்வு ஏற்படாத வகையில் இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தநிலையில் தற்போதைய நிலநடுக்கம் அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் மீட்புப்பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஹெராத் மாகாணம் தொடர் நிலநடுக்கங்களை சந்தித்து வருவதால் பொதுமக்களும் பீதியில் உறைந்துள்ளனர்.