ஆப்கானிஸ்தானில் அதிரடி தண்டனை: கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கையை துண்டித்த தலீபான்கள்


ஆப்கானிஸ்தானில் அதிரடி தண்டனை: கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கையை துண்டித்த தலீபான்கள்
x

ஆப்கானிஸ்தானில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கையை துண்டித்து தலீபான்கள் அரசு தண்டனை கொடுத்துள்ளது.

கந்தஹார்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலீபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் தலீபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரின் கைகளை வெட்டி கந்தஹாரில் உள்ள அஹ்மத் ஷாஹி மைதானத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், பல்வேறு குற்றங்களுக்காக ஒன்பது பேர் கசையடியால் அடிக்கப்பட்டதாக கவர்னர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு 35-39 கசையடிகள் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது தலீபான் அதிகாரிகள், மத குருமார்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மைதானத்தில் இருந்தனர்.

இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை தலீபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை.


Next Story