ஆப்கான் பெண்கள் கல்வி கற்க வெளிநாடு செல்ல தடை: தலீபான்கள் அடாவடி
ஆப்கான் பெண்கள் கல்வி கற்க வெளிநாடு செல்ல தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதற்கு தலீபான்கள் தடைவிதித்தது சர்வேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தடையை திரும்ப பெறக்கோரி உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தலீபான்கள் அதை புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த மாணவிகளை தலீபான்கள் விமானத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
வெளிநாடு செல்வதற்காக மாணவர்களும், மாணவிகளும் விமான நிலையம் வந்த நிலையில் மாணவர்களை மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதித்த தலீபான்கள், மாணவிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.