போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை நோக்கி 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா


போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை நோக்கி 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா
x

கோப்புப்படம்

தைவானை நோக்கி 25 போர் விமானங்களை சீனா அனுப்பியதால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

பீஜிங்,

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் சமீபகாலமாக தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தேவை ஏற்பட்டால் தைவான் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிப்போம் என சீனா மிரட்டி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தைவானை மிரட்டும் விதமாக சீனா நேற்று 25 போர் விமானங்களை தைவான் எல்லைக்குள் அனுப்பியது. இதுகுறித்து தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் சீன ராணுவத்துக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் உள்பட 25 போர் விமானங்கள் தைவானுக்குள் அத்துமீறி ஊடுருவின. மேலும் 3 போர்க்கப்பல்களும் தைவானின் நீர்பரப்புக்குள் நுழைந்தன. அதை தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க தைவான் ராணுவம் போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் அனுப்பி வைத்தது" என கூறப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த அடாவடியால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது


Next Story