சுவிட்சர்லாந்தில் 'டி-ரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு 50 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம்
6.70 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
பெர்ன்,
மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதே பூமியில் பிரம்மாண்ட உடலமைப்பைக் கொண்ட ராட்சத டைனோசர்கள் வலம் வந்திருக்கின்றன. ஒரு மாபெரும் விண்கல் பூமியில் மோதியதன் விளைவாக ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களை தாக்குப்பிடிக்க முடியாமல், பூமியில் வாழ்ந்த டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அவ்வாறு உயிரிழந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த எலும்புகளைக் கொண்டு டைனோசர்களின் வகைகள், அவற்றின் உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டிரனாசோரஸ் ரெக்ஸ்(டி-ரெக்ஸ்) என்ற வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை மொத்தமாக ஒரே எலும்புக்கூடாக சேர்க்கப்பட்டு, சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் விடப்பட்டது.
இந்த எலும்புக்கூட்டிற்கு 'டிரினிட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இந்த எலும்புக்கூடு 6.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி) ஏலம் போனது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.