கனடாவில் இந்திய தம்பதி, பேரன் மரணம்.. விபத்துக்கு காரணமான இந்திய வம்சாவளி கொள்ளையன்
குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளியே வராதபடி வலுவான ஜாமீன் சிஸ்டம் இருக்க வேண்டும் என சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டொரன்டோ:
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பாமன்வில்லே நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் கடந்த மாதம் 29-ம் தேதி கொள்ளை நடந்தது. இதில் தொடர்புடைய சந்தேக நபர் ஒரு சரக்கு வேனில் செல்வதை அறிந்த போலீசார் அந்த நபரை பிடிப்பதற்காக வாகனத்தில் துரத்தினர்.
அப்போது அந்த சரக்கு வேன் நெடுஞ்சாலை 401-ல் தவறான பாதையில் (ராங் ரூட்) அதிவேகமாக சென்றது. அப்போது, சரக்கு வேன், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு காரில் இருந்த இந்திய தம்பதி, அவர்களின் 3 மாத பேரக்குழந்தை மற்றும் சரக்கு வேனில் சென்ற சந்தேக நபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குழந்தையின் பெற்றோரும் அதே காரில் பயணித்தனர். அவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்தது, இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் சீனிவாச பிள்ளை (வயது 60), அவரது மனைவி மகாலட்சுமி (வயது 55), அவர்களின் பேரக்குழந்தை ஆதித்ய விவான் (3 மாத கைக்குழந்தை) என்பதும், குழந்தையின் பெற்றோர் பெயர் கோகுல்நாத் மணிவண்ணன், அஷ்விதா ஜவகர் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் துரத்தியபோது தவறான பாதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கொள்ளையன் ககன்தீப் சிங் (வயது 21) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ககன்தீப் சிங்கும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான்.
ககன்தீப் சிங் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜனவரி 15 - பிப்ரவரி 27 காலகட்டத்தில் நடந்த திருட்டு வழக்கில் ககன்தீப் சிங் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஓக்வில்லியில் உள்ள மதுபான கடையில் ஒருவரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளியே வராதபடி வலுவான ஜாமீன் சிஸ்டம் இருக்க வேண்டும் என சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், வழக்குகளின் தன்மைக்கு ஏற்பவும், அந்தந்த நேரத்தில் அறியப்பட்ட தகவலின் அடிப்படையில் ஜாமீன் வழங்குவது நியாயம்தான் என, ஜாமீன் தொடர்பாக வாதாடும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்தைப் பொருத்தவரை துயரமான பாதிப்பு இருந்தபோதிலும், சிறிய குற்றங்களுக்காக குற்றவாளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என டொரன்டோ குற்றவியல் வழக்கறிஞர் டேனியல் பிரவுன் தெரிவித்தார்.
கனடா அரசாங்கம், குற்றவாளிகளை வரவேற்று அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா நீண்டகாலமாக குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.