சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதி விபத்து
சூயஸ் கால்வாயில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
கெய்ரோ,
சர்வதேச பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூயல் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் எளிய முறையில் வர்த்தகம் அமையும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் ஒன்று சூயல் கால்வாயை கடந்து வந்துகொண்டிருந்து. அதேபோல் இங்கிலாந்து நிர்வாகத்தின் கீழ் உள்ள கேமான் தீவுகளை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்றும் சூயஸ் கால்வாயை கடக்க முயன்றது. அப்போது இரண்டு கப்பல்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
தகவலறிந்த கால்வாய் நிர்வாகிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இழுவை கப்பல்களை கொண்டு விபத்திற்குள்ளான கப்பல்களை மீட்கும் பணி நடந்தது. கரைக்கு இழுக்கும் பணி போராட்டத்திற்கு பின்னர் நடந்து முடிந்தது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏதும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.