அமெரிக்க மாகாணத்தை நிலைகுலைய வைத்தது, 'இயான்' புயல் - 22 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்துள்ளது. 22 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
வாஷிங்டன்,
அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற 'இயான்' புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது.
நேற்று முன்தினம் பிற்பகலில் இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. இது புளோரிடா மாகாணத்தைத் தாக்கிய பின்னர் மெதுவாக வலுவிழந்து 2-வது வகை புயலாக தரமிறக்கப்பட்டதாக தேசிய புயல் மையம் தெரிவித்தது.
இதுபற்றி புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் நிருபர்களிடம் பேசும்போது, "இந்த சூறாவளி, மழை, வெள்ளம் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னும் 2 நாட்களுக்கு நிலைமை மோசமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, புயல் மீட்பு பணியில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.
இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் புயல் மற்றும் பலத்த காற்று வீசுவதால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி புளோரிடாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மின்கட்டமைப்பை முழுமையாக மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம், இதற்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என மின்நிறுவனம் அறிவித்துள்ளது.
தேசிய புயல் மையத்தின் உயர் அதிகாரியான அந்தோணி ரெய்ன்ஸ், 'இயான்' புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு சில நாட்கள் ஆகும். இது நிச்சயம் பேரழிவாக இருக்கும் என்பது நிச்சயம் என தெரிவித்தார்.
அவசர நிலை
போர்ட் மியர்ஸ் நகரம் உள்பட லீ கவுண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயலைப் பயன்படுத்தி ஒரு பெட்ரோல் நிலையம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வெர்ஜீனியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் கவர்னர் கிளென் யாங்கின் அறிவித்துள்ளார். இதே போன்று வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாகாணங்களுக்கு முன்பாகவே ஜார்ஜியா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை முதல் அவசர நிலை போடப்பட்டுள்ளது.
புதன், வியாழக்கிழமை என இரு நாட்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெல்போர்ன் ஆர்லண்டோ, ஆர்லண்டோ, சரசோட்டா, சவுத்வெஸ்ட் புளோரிடா, செயிண்ட் பீட் கிளியர் வாட்டர், டம்பா விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கியூபாவில் இடம் பெயர்ந்தோர் பயணம் செய்த படகு மூழ்கியதில் 23 பேர் காணாமல் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினரும், கடலோரக்காவல் படையினரும் தேடி வருகின்றனர்.
நேபிள்ஸ் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் முதல் தளம் சுமார் 3 அடி தண்ணீரில் மூழ்கியது. மேலும் இந்த நகரில் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக 911 அவசர கால மையங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன.
இந்தப் புயலினால் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பின் அளவு, நேற்று முன்தினம் மாலை வரையில் தெளிவாக வரவில்லை. பலத்த காற்று வீசியதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. புயலால் சில இடங்களில் 16 அங்குல அளவுக்கு மழை பெய்து வெள்ளக்காடாகி உள்ளன.
20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளேடு தெரிவித்தது. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலை குலைந்துபோய் உள்ளது.