இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் மீண்டும் இணைந்த ஹாரி-மேகன் தம்பதியின் மெழுகு சிலைகள்


இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் மீண்டும் இணைந்த ஹாரி-மேகன் தம்பதியின் மெழுகு சிலைகள்
x

ஹாரி-மேகன் தம்பதியரின் சிலைகள் ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.

லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த மாதம் தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த 1952 பிப்ரவரி 6-ந் தேதி, தனது 25-வது வயதில் இங்கிலாந்தின் ராணியாக அரியணையில் ஏறிய அவர், தற்போது வரை ஆட்சியில் நீடித்து வருகிறார். இதன் மூலம் இங்கிலாந்தின் அரச குடும்ப வரலாற்றில், 70 ஆண்டுகளாக மக்கள் பணியில் நீடித்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதனை கொண்டாடும் விதமாக இங்கிலாந்தில் வரும் ஜூன் 2 முதல் 5-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கலாச்சார, பாரம்பரிய விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகிச் சென்ற இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்கெல் இருவரும், இந்த விழாவிற்கு வருகை தருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற 'மேடம் துசாட்ஸ்' மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கெல் ஆகிய இருவரின் மெழுகு சிலைகள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உலக புகழ்பெற்ற பல்வேறு பிரபலங்களின் மெழுகு சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மெழுகு சிலைகள் தனி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அரச குடும்பத்தில் இருந்து இளவசர் ஹாரி மற்றும் மேகன் மார்கெல் தம்பதி விலகிச் சென்ற நிலையில், அவர்கள் இருவரின் சிலைகள் அங்கிருந்து எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ராணி எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சிக்காலத்தை கொண்டாடும் வகையில், ஹாரி-மேகன் தம்பதியரின் சிலைகள் 'மேடம் துசாட்ஸ்' மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன. அரச குடும்பத்தினரின் சிலைகளுடன் ஒன்றாக சிறிது காலத்திற்கு இவர்கள் இருவரின் சிலைகளும் வைக்கப்பட உள்ளதாக அருங்காட்சியகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story