கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - இந்தியா கடும் கண்டனம்!
கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா,
கனடாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலை சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரிச்மண்ட் ஹில் நகரில், யோங்கே தெரு - கார்டன் அவென்யூ பகுதியில் உள்ள விஷ்ணு கோவிலில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது.
கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து, டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ரிச்மண்ட் ஹில்லில் உள்ள விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதில் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். இந்த கிரிமினல், வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சியானது கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், இதை வெறுப்பு காரணமாக தூண்டப்பட்ட சம்பவம் என்று விவரித்துள்ளனர். "கற்பழிப்பாளர்" மற்றும் "காலிஸ்தான்" உள்ளிட்ட 'கிராபிக்ஸ் வார்த்தைகளால்' காந்தி சிலையை யாரோ சிதைத்துவிட்டனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெறுப்பு குற்றத்தை விசாரிக்க கனடா அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்" என இந்திய துணைத் தூதரகம் டுவீட் செய்துள்ளது.
மேலும், இது குறித்து, கனடா உயர் ஆணையரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்திய சமூகத்தை பயமுறுத்த முயலும் இந்த வெறுப்பு குற்றத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். இது இங்குள்ள இந்திய சமூகத்தில் கவலை மற்றும் பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளது. நாங்கள் கனடா அரசாங்கத்தை அணுகி, விசாரணை செய்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இனம், தேசியம், மொழி, நிறம், மதம், வயது, பாலினம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் பிறரை பாதிப்பவர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மேலும் வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புச் சார்பு சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் தீவிரமாக விசாரிக்கிறோம்" என்று அவர் கூறினார்.