இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13ஏ திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த திருத்தம், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால், அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
மோடி வலியுறுத்தல்
சமீபத்தில் தமிழர் கட்சிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்தினார். அப்போது, போலீஸ் அதிகாரத்தை தவிர்த்து, 13ஏ திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர், கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மோடியை சந்தித்தார். அவரிடம், 13ஏ திருத்தத்தை அமல்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துமாறும், தமிழர்களின் கண்ணியத்தை உறுதி செய்யுமாறும் மோடி வலியுறுத்தினார்.
அனைத்து கட்சி கூட்டம்
இந்த பின்னணியில், அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை (புதன்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிபரின் செயலகத்தில் இக்கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கூட்டத்தில், தேசிய நல்லிணக்க திட்டம் பற்றி எடுத்துரைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.