யுபிஐ மூலம் இந்தியா-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பணப் பரிமாற்றம் விரைவில் தொடங்கப்படும் என தகவல்
இந்தியா-சிங்கப்பூர் இடையே விரைவில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப ஆயத்த பணிகள் நிறைவடைந்துவிட்டன.
சிங்கப்பூர்,
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூர் மத்திய வங்கி இணைந்து இருநாட்டின் யுபிஐ மற்றும் பே-நவ் ஆகிய பணப் பரிமாற்ற அமைப்புகளை இணைப்பதற்கான திட்டத்தை தொடங்கின. இந்த நிலையில், அது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்தியா-சிங்கப்பூர் இடையே விரைவில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள, இருநாட்டின் யுபிஐ மற்றும் பே-நவ் ஆகிய இரு இணையவழி பணப் பரிமாற்ற அமைப்புகளை இணைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஆயத்த பணிகள் நிறைவடைந்துவிட்டன.
இதன்மூலம், இந்தியா-சிங்கப்பூர் இடையே குறைந்த செலவில் உடனடியாக பணப் பரிமாற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் பி குமரன் கூறுகையில், "சிங்கப்பூர் அதன் பே-நவ் பணப் பரிமாற்ற அமைப்பை யுபிஐ-யுடன் இணைக்கும் திட்டம் அடுத்த சில மாதங்களில் நிறைவடைந்துவிடும். அதன் பின் சிங்கப்பூரில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்யலாம். பிரதமர் மோடி இது குறித்து அறிவிப்பை வெளியிடுவார்" என்றார்.