ஈராக் விமான நிலையம் மீது துருக்கி 'டிரோன்' தாக்குதல்: 6 பேர் பலி


ஈராக் விமான நிலையம் மீது துருக்கி டிரோன் தாக்குதல்: 6 பேர் பலி
x
தினத்தந்தி 20 Sept 2023 3:15 AM IST (Updated: 20 Sept 2023 11:34 AM IST)
t-max-icont-min-icon

ஈராக் விமான நிலையம் மீது துருக்கி ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர்.

அங்காரா,

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈராக், துருக்கி நாட்டு பிரிவினைவாதிகள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களை ஒழிக்க தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் குர்திஸ்தான் ஆதரவு போராளிகள் பெருபான்மையினத்தவர்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் இருதரப்பிலும் உயிர்பலி ஏற்பட்டு போர் பதற்றம் மிகுந்த பகுதியாக உள்ளது.

டிரோன் தாக்குதல்

ஈராக்கின் வடக்கு பகுதியின் குர்திஸ் பிராந்தியத்திற்குட்பட்ட சுலைமானியாவில் இருந்து 50 கி.மீ தூரத்தில் அர்பட் நகர் அமைந்துள்ளது. அங்குள்ள விமான நிலையத்தை குர்திஸ்தான் ஆதரவாளர்கள் போர் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர். அங்கிருந்து இயக்கப்படும் விமானங்கள் துருக்கி நாட்டின் எல்லைகளுக்குள் ஊடுருவி போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.

இதனால் துருக்கி ராணுவத்தினர் ராணுவ மூலோபாய முக்கியத்துவம் பெற்ற இந்த விமான நிலையத்தை தகர்க்க திட்டம் தீட்டி வந்தனர். அதன்படி நவீன தொழில்நுட்பம் கொண்ட டிரோன்களை ஏவி விட்டு அர்பட் விமான நிலையத்தின் மீது துருக்கி ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத குர்திஸ்தான் ராணுவத்தினர் விமான நிலையத்திற்குள் புகுந்த டிரோன்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இருப்பினும் டிரோன்களின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர்.

6 பேர் பலி

அதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு டிரோன்கள் குண்டுமழை பொழிந்து விமான நிலையத்தை தகர்த்தன. பலம்பொருந்திய டிரோன்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் குர்திஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையம் தரைமட்டமாகி குப்பை மேடாக காட்சி அளித்தது.

இந்த தாக்குதலில் குர்திஸ்தான் ஆதரவு போராளிகள் 6 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்து குர்திஸ்தான் ஆதரவு தலைவர் பாவேல் தலபானி துருக்கியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் நலம் பெறவேண்டி ஆறுதல் தெரிவித்தார்.


Next Story