ஷாங்காயில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு : இயல்பு நிலை திரும்புகிறது..!!
கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் ஷாங்காய் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ஷாங்காய்,
கொரோனா பரவல் வேகமெடுத்ததால் சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து கடந்த சில தினங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டது. குறிப்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு ஷாங்காய் அதிகாரிகள் வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றத் தொடங்கினர்.
அதை தொடர்ந்து இன்று முதல் அந்த கட்டுப்பாடுகள் மிகப்பெரிய அளவில் தளர்த்தப்படுகிறது. பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு மக்கள் மீண்டும் வெளியில் செல்ல அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
மால்கள், மருந்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் 75 சதவீத திறனில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அங்கு குறிப்பிட்ட சில உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று முடிவுகள் பெற்றிருக்க வேண்டும்.
ஷாங்காய் நகரவாசிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடைகள் 75 சதவீத திறனில் செயல்படலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் ஷாங்காய் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.