அமெரிக்காவை உலுக்கிய பாலியல் வழக்கு; புலனாய்வு பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வீராங்கனைகள்
அமெரிக்க புலனாய்வு பிரிவு புகார்களை சரியாக விசாரிக்கவில்லை என ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவரான லாரி நாசர் என்பவர் மீது, தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் பலர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், லாரி நாசருக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இப்போது இது தொடர்பான வழக்கில் தான் அமெரிக்க புலனாய்வு பிரிவான எஃப்.பி.ஐ. (FBI) தற்போது சிக்கியுள்ளது. லாரி நாசருக்கு எதிரான நம்பகமான புகார்களை அமெரிக்க புலனாய்வு பிரிவு சரியாக விசாரிக்கவில்லை என ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி, அமெரிக்க புலனாய்வு பிரிவு, நீதித்துறை என தங்களை பாதுகாக்க வேண்டிய ஒவ்வொரு துறையும் தங்களுக்கு துரோகத்தையே செய்ததாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை மெக்கெய்லா மெரானி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க நீதித்துறை இது தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், 2015 ஆம் ஆண்டு, லாரி நாசருக்கு எதிராக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் தவறான மற்றும் உண்மையை மூடி மறைத்த நடவடிக்கைகள், லாரி நாசர் தனது வன்மத்தை தொடர வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இதே குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவுக்கு பல பதக்கங்களை பெற்றுத்தந்த வீராங்கனைகளான சைமோன் பைல்ஸ், ஆலி ரைஸ்மன், மெக்கேலா மெரோனி உள்ளிட்ட 90-க்கும் அதிகமான பெண்கள், அமெரிக்க புலனாய்வு பிரிவான எஃப்.பி.ஐ. மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் தங்களுக்கு இழப்பீடுத் தொகையாக சுமார் ஒரு பில்லியன் டாலரை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க புலனாய்பு பிரிவின் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.