பல ஆயிரம் கி.மீ. வேகத்தில்... பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள்; நாசா தகவல்
விமானம் அளவுள்ள குறுங்கோள் உள்பட பல ஆயிரம் கி.மீ. வேகத்தில், பூமியை 5 குறுங்கோள்கள் இன்று நெருங்குகின்றன என நாசா தெரிவித்து உள்ளது.
நியூயார்க்,
சூரிய மண்டலத்தில் நாம் வாழும் பூமியை சுற்றி பல குறுங்கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயணம், பாதை உள்ளிட்டவற்றை பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், 100 அடி நீளமுள்ள குறுங்கோள் ஒன்று பூமிக்கு மிக நெருக்கத்தில் இன்று வரக்கூடும் என நாசா தெரிவித்து உள்ளது.
இதேபோன்று பூமியை நெருங்கி வரும் மொத்தம் 5 குறுங்கோள்களின் பட்டியலை நாசா வெளியிட்டு உள்ளது.
அவற்றில் 2023 JZ4 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, ஒரு விமானம் அளவுக்கு பெரியது. 100 அடி நீளத்திற்கு, பூமியை 14.3 லட்சம் மைல் தொலைவில் இன்று நெருங்கி செல்கிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 57,885 கி.மீ. ஆக இருக்கும்.
2021 KO2 என பெயரிடப்பட்ட குறுங்கோள், 28 அடி நீளத்திற்கு, பஸ் அளவுக்கு பெரியது. இது 37.5 லட்சம் மைல் தொலைவில் இன்று பூமியை நெருங்குகிறது. அப்போது மணிக்கு 50,215 கி.மீ. வேகத்தில் அது பயணிக்கும்.
2023 KV3 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, பூமியை 29.6 லட்சம் மைல் தொலைவில் இன்று நெருங்கி வருகிறது.
இதேபோன்று, 2023 KV2 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, ஒரு பஸ் அளவுக்கு பெரியது. 73 அடி நீளத்திற்கு, 15.8 லட்சம் மைல் தொலைவில் பூமியை இன்று நெருங்கி செல்கிறது.
2023 KU2 என பெயரிடப்பட்ட குறுங்கோள், ஒரு பஸ் அளவுக்கு பெரிய, 36 அடி நீளம் கொண்டது. இது பூமியை 6.75 லட்சம் மைல் தொலைவில் நெருங்கும்போது அதன் வேகம் மணிக்கு 52,800 கி.மீ. ஆக இருக்கும்.