கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீச்சு - 300 வீரர்கள் கொன்று குவிப்பு


கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீச்சு - 300 வீரர்கள் கொன்று குவிப்பு
x

கோப்புப்படம்

கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கீவ்,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5 மாதங்களாக நீடிக்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

மாறாக கிழக்கு உக்ரைனை தன்வசப்படுத்துவதற்காக ரஷியா நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்காக கிழக்கு உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படை கண்மூடித்தனமாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் டோனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் ஒன்றின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள பள்ளிக்கூடம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் தரப்பு, இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. அதே சமயம் 300 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வில் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் ரஷிய படைகள் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 3 பேர் பலியானதோடு, 23 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.


Next Story