காப்பாற்றுங்கள்...!! உதவி கேட்ட காசா சிறுமி உள்பட குடும்பமே பலியான சோகம்


காப்பாற்றுங்கள்...!! உதவி கேட்ட காசா சிறுமி உள்பட குடும்பமே பலியான சோகம்
x
தினத்தந்தி 11 Feb 2024 9:59 AM IST (Updated: 11 Feb 2024 10:03 AM IST)
t-max-icont-min-icon

வாகனத்தில் சிக்கியிருந்த சிறுமி ரஜப்பை, செஞ்சிலுவை சங்க மீட்பு குழுவினர் 2 பேர் நெருங்கியிருந்த சூழலில், மற்றொரு தாக்குதலில் அவர்கள் உயிரிழந்தனர்.

காசா,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்திய கோர தாக்குதல் எதிரொலியாக, அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. தொடர்ந்து தாக்குதலை மற்றும் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், போரால் சீரழிந்த காசாவில், ஹிந்த் ரஜாப் (வயது 6) என்ற சிறுமி குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், தாக்குதலில் சிக்கி சிறுமியின் குடும்பத்தினர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்கள் அருகே தனித்து விடப்பட்ட நிலையில், சிறுமி ரஜப் பயத்துடனும், காயத்துடனும் இருந்திருக்கிறார்.

அந்த சிறுமி பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கத்திற்கு மொபைல் போன் வழியே தொடர்பு கொண்டு, நான் பயந்து போயிருக்கிறேன். எவரேனும் சிலரை அழைத்து, என்னை வந்து காப்பாற்றும்படி கூறுங்கள் என்று கேட்டு கொண்டிருக்கிறார்.

அவருடன் சென்ற 6 உறவினர்கள் உயிரிழந்தனர் என நம்பப்படுகிறது. இந்நிலையில், வாகனத்தில் சிக்கியிருந்த சிறுமி ரஜப்பை, செஞ்சிலுவை சங்க மீட்பு குழுவினர் 2 பேர் நெருங்கியிருந்த சூழலில், மற்றொரு தாக்குதலில் அவர்களும் உயிரிழந்தனர். இந்த துயர தகவலை அந்த செஞ்சிலுவை சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் படைகள், அந்த ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியது.

அதனுள் மீட்பு குழுக்களை சேர்ந்த 2 பேர் இருந்தனர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்திற்கு இடையே ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக முன்பே பேசியிருந்தபோதும், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சிறுமி ரஜப், மீட்பு குழுவினர் யூசுப் ஜீனோ மற்றும் அகமது அல்-மதவுன் ஆகிய 2 பேர் என 3 பேரின் வாழ்வும் சோகத்தில் முடிந்து போனது வருத்தம் அளிக்கிறது என பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் எக்ஸ் சமூக ஊடக பதிவில் தெரிவித்து இருக்கிறது.

அந்த சிறுமியை காப்பாற்ற நாங்கள் செல்கிறோம் என எங்கள் குழுவினரான, ஹீரோக்கள் கூறி சென்றபோது, அவர்கள் அனைவரும் மரணம் அடைந்தது நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்காதது என்றும் தெரிவித்து உள்ளது. அதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், ஆம்புலன்ஸ் முழுவதும், குண்டுவீச்சு தாக்குதலில் எரிந்து போயிருந்தது. சிறுமி எப்படி இறந்து போனாள் என்ற விவரம் தெரிய வரவில்லை.


Next Story