கிழக்கு உக்ரைனில் ரஷியா உக்கிர தாக்குதலில் 13 பேர் பலி


கிழக்கு உக்ரைனில் ரஷியா உக்கிர தாக்குதலில் 13 பேர் பலி
x

கிழக்கு உக்ரைனில் ரஷிய தாக்குதல் உக்கிரம் அடைந்துள்ளது. அங்கு அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர்.

போரால் உணவுப்பொருள் நெருக்கடி

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய உணவுப்பொருள் நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. இந்த போரினால் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல் எண்ணெய், மாவுப்பொருட்கள் ஏற்றுமதி பெரும்பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

இந்த நிலையில், போர் நேற்று 86-வது நாளை எட்டியது.

மரியுபோல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அஜோவ் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷொய்கு தெரிவித்துள்ளார். இந்த நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது.

கிழக்கு உக்ரைனில் உக்கிர தாக்குதல்

தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. தொடர்ந்து ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத் தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதன் பிராந்திய கவர்னர் செர்கிய் ஹைடாய் தெரிவித்துள்ளார். அங்கு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செவிரோடொனெட்ஸ்க் நகர் மீதான ரஷியாவின் தாக்குதல் வெற்றி பெறவில்லை, ரஷிய படைவீரர்களுக்கு இழப்பு ஏற்பட்டு, அவர்கள் பின்வாங்கினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நரகம்போன்ற நிலை

அதே நேரத்தில் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், அங்கு நரகம் போல நிலைமை உள்ளதாகவும், இது மிகைப்படுத்திக்கூறப்பட்ட வார்த்தைகள் அல்ல என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷிய படைகளின் முன்னேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் செவிரோடொனெட்ஸ்க் மற்றும் ரூபிஸ்னே நகரங்களுக்கு இடையே இருந்த ஒரு பாலத்தை உக்ரைன் படையினர் அழித்துள்ளனர். இதையொட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

ரஷிய படைகளின் 14 தாக்குதல்களை முறியடித்ததாகவும், 8 டாங்குகளையும் அழித்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உதவி

ரஷிய படைகளை எதிர்த்து போரிடுவதற்கு அமெரிக்கா 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.750 கோடி) மதிப்பிலான போர் தளவாடங்களையும், ஆயுதங்களையும் அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவிகளையும், மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதற்கு 40 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.3 லட்சம் கோடி) ஒதுக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே நிறைவேறி விட்டது.


Next Story