சீன அதிபராக 3-வது முறையாக தேர்வு: ஷீ ஜின்பிங்-க்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து
சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
மாஸ்கோ,
சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார். இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.
ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், சீன அதிபராக 3-வது முறையாக தேர்வாகியுள்ள ஷீ ஜின்பிங்கிற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின், ஜின்பிங்கிடம் கூறியுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் தெரிவித்துள்ளது.
ஜின்பிங் செழிப்பாகவும், புதிய வெற்றிகளை பெற விரும்புகிறேன். நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று புதின் தெரிவித்துள்ளார்