உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்.. 6 பேர் பலி


உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்.. 6 பேர் பலி
x

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷியா தாக்குதலை நடத்தியது.

கீவ்:

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் ரஷியா, உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளால் உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுளாக நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் இந்த போர் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷியா இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷியா தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது,.

போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு தெரிவித்ததுடன், புதிய ராணுவ உதவி தொகுப்பையும் அறிவித்தார். பெரிய ஆயுதங்களை வாங்குவதற்கான கடன் மற்றும் அவற்றை இணைந்து உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிதல் உள்ளிட்ட அறிவிப்பை வெளியிட்ட நிலையில், ரஷியாவின் இந்த தாக்குதல் அரங்கேறியிருக்கிறது.


Next Story