ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயித்த ஐரோப்பிய யூனியன் - எவ்வாறு அமலாகுகிறது?
ரஷிய கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் விலை உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது.
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 285-வது நாளை எட்டியுள்ளது. இந்த போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
மேலும், ரஷியாவிடமிருந்து கடல் வழியாக கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் விலை வரம்பை நிர்ணயித்து உள்ளது. அதன்படி, ரஷியாவிடமிருந்து கடல் வழியாக வரும் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கும் குறைவான விலையை ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்துள்ளது.
உலகின் முக்கிய கப்பல், காப்பீட்டு நிறுவனங்கள் பணக்கார நாடுகளான ஜி7 நாடுகளை மையமாக கொண்டுள்ளன. அதன் மூலம் பேரல் ஒன்றுக்கு 60 டாலர்கள் என நிர்ணயிக்கப்படும் ரஷிய கச்சா எண்ணெய் மட்டுமே ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியனின் எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் கடன் நிறுவனங்கள் மூலம் மற்றொரு நாட்டிற்கு (மூன்றாம் நாடு) அனுப்பி வைக்கப்படும்.
பேரல் ஒன்றுக்கு 60 டாலர்கள் என நிர்ணயிக்கவில்லை என்றால் 3-ம் நாட்டிற்கு ரஷிய எண்ணெய் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய யூனியனின் எண்ணெய் கப்பல்கள், காப்பீட்டு நிறுவனங்களை பயன்படுத்த முடியாது.
இந்த கட்டுப்பாடு ரஷிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியை வெகுவாக குறைத்து , போரில் ரஷியாவின் ஆதிக்கம் குறையும் என ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா எண்ணுகிறது.
ஆனால், இந்த விலை வரம்பு போரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்த விலை வரம்பை பின்பற்றப்போவதில்லை என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.