உக்ரைன் போர் #லைவ் அப்டேட்ஸ்: மனிதகுலத்தை அழிவிற்கு அழைத்து செல்லாதீர்கள் ; போப் பிரான்சிஸ்


தினத்தந்தி 6 Jun 2022 2:09 AM IST (Updated: 6 Jun 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் - ரஷிய போர் முடிவுக்கு கொண்டு வர உண்மையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.


Live Updates

  • உக்ரைன் சண்டையில் ரஷிய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதாக தகவல்
    6 Jun 2022 9:25 PM IST

    உக்ரைன் சண்டையில் ரஷிய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதாக தகவல்

    ரஷியாவின் உயர்மட்ட ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் என்பவர் உக்ரைனின் டோன்பாஸ் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக ரஷிய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.

    டோன்பாஸ் பகுதியில் உள்ள உக்ரைனிய குடியிருப்பு ஒன்றின் மீது தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டதாக ரோசியா 1 என்ற அரசு ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

    'டோனட்ஸ்க் மக்கள் குடியரசு' என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்ட பகுதியில் இருந்து குடுசோவ் படைநடத்திச் சென்றதாக அந்த செய்தியாளர் அலெக்சாண்டர் ஸ்லாட்கோவ் கூறியுள்ளார். ஆனால், இந்த செய்தி குறித்து ரஷியப் பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் கூறவில்லை.

  • நவீன ரக ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க இங்கிலாந்து முடிவு...!
    6 Jun 2022 5:41 PM IST

    நவீன ரக ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க இங்கிலாந்து முடிவு...!

    உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், எம் 270 ரக ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

    கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது இந்த ராக்கெட் லாஞ்சர்கள்.

    ரஷியாவின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள இந்த தளவாடங்கள் உக்ரைன் நண்பர்களுக்கு மிகவும் உதவும் என்று லண்டனில் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி பென் வாலஸ் தெரிவித்தார்.

  • 6 Jun 2022 1:38 PM IST

    ரோம்:

    உக்ரைன் - ரஷியா இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷிய படைகள் தொடர்ச்சியாக உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

    உக்ரைன் தலைநகர் கீவ் இன்னும் ரஷியாவுக்கு எட்டாக்கனியாக இருப்பது தான் போர் 100 நாட்களை தாண்டியும் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும். இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    போரை நிறுத்துவதற்கு சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

    குறிப்பாக வாட்டிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகளின் தலைவர்கள் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

    செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ் உக்ரைனுக்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்.

    மனிதகுலத்தை அழிவிற்கு அழைத்து செல்லாதீர்கள். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உண்மையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். போருக்கான தீர்வை எட்டுவதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும் எனஅழைப்பு விடுத்தார்.

  • இங்கிலாந்து தனது முதல் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புகிறது
    6 Jun 2022 12:39 PM IST

    இங்கிலாந்து தனது முதல் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புகிறது

    ரஷியாவால் மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் இங்கிலாந்து தனது முதல் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புகிறது என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறியுள்ளார்.

    எம்270 ஏவுகணை ராக்கெட் அமைப்பு ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள உதவும் என்று பென் வாலஸ் கூறினார்.எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பதை இங்கிலாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் மூன்று வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • உக்ரைனுக்கு  மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை வழங்கினால்.... மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை...!
    6 Jun 2022 4:51 AM IST

    உக்ரைனுக்கு மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை வழங்கினால்.... மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை...!

    உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை வழங்கினால், உக்ரைனில் புதிய இலக்குகளை குறி வைத்து தாக்குவோம் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

    இப்படிப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்குவது, மோதலை முடிந்த வரை இழுத்துச்செல்வதுதான் என்றும் அவர் சாடினார்.

    உக்ரைனுக்கு நடுத்தர இலக்கு பன்முக ராக்கெட் அமைப்புகளை வழங்க ஜோ பைடன் நிர்வாகம் தயாராகி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிய நிலையில், இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    இதற்கிடையே உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் ரஷியாவை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியது, உக்ரைனுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் தொடர் தாக்குதல்  - உக்ரைன் படைத்தளபதி குற்றச்சாட்டு
    6 Jun 2022 2:45 AM IST

    கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் தொடர் தாக்குதல் - உக்ரைன் படைத்தளபதி குற்றச்சாட்டு

    கிழக்கு உக்ரைனில் கிர்ஸ்கே, மைர்னாடோலினா ஆகிய பகுதிகளில் கா-52 ஹெலிகாப்டர்களும், உஸ்தினிவ்காவில் சு-25 போர் விமானமும் வான்தாக்குதலில் ஈடுபட்டன. லிசிசான்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பெருத்த சேதம் அடைந்தன.

    ரஷிய படைகள் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிமருந்துகளை கார்கிவ் பிராந்தியத்தில் பயன்படுத்தியதாக உக்ரைன் படைத்தளபதி குற்றம் சாட்டினார்.

    மேலும் கிழக்கு உக்ரைனில் சீவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  • 6 Jun 2022 2:29 AM IST

    உக்ரைன் போரில் நீண்ட காலமாக தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷிய படைகள் நிறுத்தி வைத்திருந்தன. ஆனால் நேற்று காலையில் கீவ் நகர் மீது மீண்டும் ரஷிய படைகள் தாக்குதலை தொடுத்தன. ரஷிய படைகளின் ஏவுகணை தாக்குதல்களால் ஏராளமான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக டேர்னிட்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கி மாவட்டங்களில் கரும்புகை மண்டலங்கள் உருவாகின.

    ஏவுகணை தாக்குதலின்போது ரஷிய படைகள் சைரன் களை ஒலிக்கவிடவில்லை.

    தலைநகரையும், பிற நகரங்களையும் விட்டு விட்டு கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வந்த ரஷியா, மீண்டும் கீவ் மீது தாக்குதல் நடத்தி இருப்பது, இன்னும் அந்த நகர் மீது தாக்குதல் நடத்தும் திறனையும், விருப்பதையும் ரஷியா கொண்டிருப்பதையே காட்டுவதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்த ஏவுகணை தாக்குதலில் உயிர்ப்பலி எதுவும் நேரிட்டதாக தகவல் இல்லை. ஒருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கீவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்குகள் மற்றும் பிற கவசங்கள் உள்ளிட்ட தளவாடங்களை அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.


Next Story