உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; தப்ப வழியின்றி தாய், மகள் பலியான சோகம்


உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; தப்ப வழியின்றி தாய், மகள் பலியான சோகம்
x

உக்ரைனின் கீவ் நகரில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் புகலிடம் மூடப்பட்டு, தப்ப வழியின்றி தாய், மகள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படையெடுப்பின் ஒரு பகுதியாக, வான்வழி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றிரவு ரஷியா நடத்திய 10-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் வழியிலேயே தடுத்து அழித்தது.

ஆனால், அந்த ஏவுகணைகளில் இருந்து உடைந்து, கீழே விழுந்த பாகங்கள் தாக்கியதில் மக்கள் சிலர் உயிரிழந்து உள்ளனர். கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன என சி.என்.என். தெரிவிக்கின்றது.

இதில், 9 வயது சிறுமி, சிறுமியின் 34 வயது தாய் மற்றும் 33 வயது பெண் என 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 12 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

ஏவுகணை வீச்சில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் புகலிடம் ஒன்றில் நுழைய முயன்று உள்ளனர். எனினும், அது பூட்டப்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் தப்ப வழியின்றி, தாக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, கீவ் நகர மேயர் கூறும்போது, வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கையின்போது, இனி போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வெடிகுண்டு புகலிடங்கள் திறந்து இருக்கின்றன என உறுதி செய்வார்கள் என கூறியுள்ளார்.

உக்ரைனின் உள்துறை மந்திரி இஹோர் கிளிமெங்கோ கூறும்போது, போரின்போது, வெடிகுண்டு புகலிடங்கள் மூடியிருப்பது என்பது அலட்சியம் என்பது மட்டுமின்றி அது ஒரு குற்றசெயல் என கூறியுள்ளார்.


Next Story