சொகுசு கப்பல் பீகாரில் தரைதட்டவில்லை, திட்டமிட்டபடி பயணம் தொடர்கிறது - நீர்வழி ஆணையம் தகவல்


சொகுசு கப்பல் பீகாரில் தரைதட்டவில்லை, திட்டமிட்டபடி பயணம் தொடர்கிறது - நீர்வழி ஆணையம் தகவல்
x

சொகுசு கப்பல் பீகாரில் தரைதட்டவில்லை என்றும் திட்டமிட்டபடி பயணம் தொடர்வதாகவும் நீர்வழி ஆணையம் தெரிவித்துள்ளது.

சாப்ரா,

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் இருந்தது.

இந்த சூழலில் இந்த சொகுசு கப்பல் பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது தரை தட்டி நின்றதாகவும், கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கங்கா விலாஸ் கப்பல், சாப்ராவில் சிக்கவில்லை என்று இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் கூறி உள்ளது. 'சொகுசு கப்பல் திட்டமிட்டபடி பாட்னாவை அடைந்தது. சாப்ராவில் கப்பல் சிக்கியதாக வெளியான செய்தியில் முற்றிலும் உண்மை இல்லை. திட்டமிட்டபடி கப்பல் அதன் பயணத்தைத் தொடருகிறது என சஞ்சய் பந்தோபாத்யாய் கூறியதாக மேற்கோள் காட்டி இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. '

இதுதொடர்பாக சாப்ரா அதிகாரி சதேந்திர சிங் கூறுகையில், "நான் கூறிய தகவலை உள்ளூர் ஊடகவியலாளர்கள் தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் அந்த இடத்தில் இருந்தன என்று நான் சொன்னேன். கப்பலுக்கு எந்தவித தடங்கலும் இல்லை' என்று அவர் கூறினார்.


Next Story