இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் - ரிஷி சுனக் அறிவிப்பு
ரிஷி சுனக் பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டை பொறுத்தவரை அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் , இது தொடர்பாக பிரதமர் சுனக் இது 2024 இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திலிருந்த நிலையில், திடீரென உடனே நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டார். அப்போதே தேர்தல் குறித்துதான் என்று ஊடகங்களில் செய்திகள் கசிய ஆரம்பித்தது. இது ஒருபுறம் எனில் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிழக்கு ஐரோப்பாவிற்கான பயணத்தை திடீரென ஒத்திவைத்தார்.
இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள பிபிசி, ஐடிவி, ஸ்கை நியூஸ் மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்கள், அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கையில் சுனக் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியிருந்தன. இதனிடையே ஊடகங்கள் எதிர்பார்த்தபடியே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இதுவாகும். கடந்த அக்டோபர் 2022 இல் நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகு அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதமரானார். வரும் ஜூலையில் நடைபெற உள்ள இங்கிலாந்து தேர்தல் என்பது, 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.