வன்முறை போராட்டம் எதிரொலி.. அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீஸ் குவிப்பு
சட்டவிரோதமாக பேராட்டம் நடத்தும் மாணவர்களை கலைப்பதற்காக எரிச்சலூட்டும் ரசாயன வெடிமருந்துகளை போலீசார் பயன்படுத்துகின்றனர்.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. இதனால் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போராட்டக்களமாக மாறி உள்ளன.
காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். தடையை மீறி போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
கைது நடவடிக்கையையும் மீறி மாணவர்கள் ஆங்காங்கே ஒன்றுதிரணடு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் கலவர தடுப்பு பிரிவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பேராட்டம் நடத்தும் மாணவர்களை கலைப்பதற்காக எரிச்சலூட்டும் ரசாயன வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று வன்முறை வெடித்தது. பாலஸ்தீன ஆதரவு போராட்டக்குழுவினரின் முகாம் அருகே உள்ள உள்ள தடுப்புகளை இடித்து தள்ள முயன்றனர். அவர்கள் மீது பாலஸ்தீன ஆதரவு போராட்டக்குழுவினர் பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டினர். இந்த மோதலைத் தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகள் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றனர். இதையடுத்து அங்கு போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகங்களில் ஹெல்மெட் அணிந்த கலவர தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த மாணவர்கள் திகைப்படைந்தனர்.
இவ்வளவு போலீஸ் படை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆனாலும், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைவதால் இது அவசியம் என கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலம்பியா மற்றும் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றியபோது போலீசார் தாக்கியதாகவும், முரட்டுத்தனமாக கைது செய்ததாகவும் சில மாணவர்கள் குற்றம்சாட்டினர். சுமார் 6 மணி நேரம் காவலில் வைத்திருந்து அதன்பிறகே விடுவித்ததாகவும் கூறினர்.