உக்ரைன் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணி தொடரும் - பல்கேரியா அரசு உறுதி
பல்கேரிய நிறுவனங்களுக்கு ரஷியா இனி உதிரி பாகங்களை வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோபியா,
ரஷியாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது. எனவே, அந்த நிறுவனங்களுக்கு ரஷியா இனி உதிரி பாகங்களை வழங்காது.
இந்த நடவடிக்கையானது பல்கேரியாவை கடுமையாக பாதிக்காது என்றும், உக்ரைனின் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியை தடுக்காது என்றும் பல்கேரிய ராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறி உள்ளார். உக்ரைன் ராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரூபிளில் பணம் செலுத்த மறுத்ததால் பல்கேரியாவிற்கு ரஷியா எரிவாயு விநியோகத்தை நிறுத்தியதைக் குறிப்பிட்ட ஜாகோவ், எரிவாயு கொள்முதலில் என்ன நடந்தோ, அதேபோன்று இப்போது ஹெலிகாப்டர் உரிமங்களிலும் நடந்துள்ளது என்றார்.